
சமூக ஊடக பிரபலம் கூமாப்பட்டி தங்கப்பாண்டிக்கு பேருந்தில் விபத்து ஏற்பட்டால் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள கூமாப்பட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு பிரபலமடைந்தார். இதையடுத்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாய்ப்பு கிடைத்து, அவர் அதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சொந்த ஊரான கூமாப்பட்டிக்குச் சென்றுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கூமாப்பட்டிக்கு பேருந்தில் சென்ற நிலையில், தங்கப்பாண்டி இறங்க வேண்டிய இடம் வந்துள்ளது. இதற்காக அவர் எழுந்து நின்ற நிலையில், எதிர்பாராத விதமாக பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய தங்கபாண்டி பேருந்தில் இருந்த கம்பியில் மோதியுள்ளார். இதில் அவரது தோள்ப்பட்டையில் அடிபட்டுள்ளது.
இதையடுத்து தங்கப்பாண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது,
’’ ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நான் இறங்கும் இடம் வந்தது அப்போது படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பேருந்து ஓட்டுநர் முருகேசன் பிரேக் அடித்தார். இதில் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தேன். உடனே பேருந்தின் கதவுகள் லாக் ஆகிவிட்டன. உடனே ஓட்டுநர் முருகேசனிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் நீ என்ன வடக்கனா என்று என்னைப் பார்த்துக் கேட்டார். அந்தக் கேள்வி என்னை மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது. நான் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்”
இவ்வாறு கூறினார்.