2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அமையாது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் நேற்று நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கே.என். நேரு சிறப்புறையாற்றினார்.
இதில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
"ஒரு பக்கம் சீமான் நம்மைக் குறை கூறுகிறார். ஒரு பக்கம் புதிதாக வரப்போகிறவர் நமக்கு எதிராக நிற்கிறார். அடுத்தது நாங்கள்தான் என அதிமுக கூறி வருகிறது. எவ்வளவு நன்மை செய்தாலும் பாமக நம்மைக் குறைகூறுகிறார்கள். பாஜக ஏற்கெனவே எதிரியாக இருக்கிறார்கள்.
எதிரிகள் அதிகமாக இருக்கும் காலம் இது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டப்பேரவைத் தேர்தலில் அமையுமா என்றால் நிச்சயம் அதுபோன்ற சுமூகமான ஒரு சூழல் இருக்காது.
இந்த முறை எந்தவொரு இடத்திலும் அதிமுக தயாராகவில்லை. யார் தலைவர், யார் தேர்தலில் போட்டியிடப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடத்தில் பெரிய குழப்பம் உள்ளது. இந்தக் குழப்பம்தான் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தரும்" என்றார் கே.என். நேரு.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சௌந்தர பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.