ஆட்டுக்குட்டியை எல்லாம் கட்டி வைத்திருந்த இடத்தில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நீதிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்குக் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. பாஜக மாநில மகளிரணித் தலைவர் உமாரதி, குஷ்பு உள்ளிட்டோர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு உரையாற்றிய பிறகு, அவர் உள்பட இதில் ஈடுபட்ட பாஜகவினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் ஆட்டு மந்தைக்கு மத்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. விடுவிக்கப்பட்டவுடன் மாலை செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு இதனை உறுதிப்படுத்தினார்.
"நிறைய ஆட்டுக்குட்டிகள் இருந்தன. அங்குதான் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். மண்டபம் இருந்தது. ஆனால், அங்கு ஆட்டுக்குட்டியை எல்லாம் கட்டி வைத்திருந்தார்கள். நாங்கள் அங்குதான் இருந்தோம். ஆனால், பரவாயில்லை. காவல் துறையினருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவைப் பின்பற்றினார்கள், அவ்வளவுதான்.
ஏதோவொரு சாரின் உத்தரவைப் பின்பற்றுகிறார்கள். அந்த சார் யார் என்பதை வெளியில் சொல்ல மறுக்கிறார்கள். யார் அந்த சார் என்பதைக் கண்டறிய நாங்களும் முயற்சிக்கிறோம்" என்றார் குஷ்பு.