
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக மதுரையில் பேரணியில் ஈடுபட முயற்சித்து கைதான குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் ஆட்டு மந்தையுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நீதிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பேரணி மதுரையில் தொடங்கி சென்னையில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும், பாஜகவின் மாநில மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் பேரணியில் ஈடுபட முயற்சித்தார்கள்.
செல்லத்தம்மன் கோயில் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். உமாரதி தலைமையில் கையில் சிலம்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு உரையாற்றினார்.
இதையடுத்து, குஷ்பு உள்பட பேரணியில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தார்கள். இதுபோன்ற கைது சம்பவங்களின்போது கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவார்கள்.
இதன்படி குஷ்பு, உமாரதி உள்ளிட்டோர் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதே மண்டபத்திலுள்ள ஆட்டு மந்தையில் ஏராளமான ஆடுகள் அழைத்து வரப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டன.
குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் ஆட்டு மந்தையுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.