

கேரளத்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக இளம்பெண் காணொளி வெளியிட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பேராசிரியை சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் அரசு பேருந்தில் பயணித்தபோது அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஆணின் கை, அவர் மீது தகாத முறையில் படுவது பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இளம்பெண்ணுக்கு ஆதரவாகவும், ஆணுக்கு எதிராகவும் பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டனர்.
உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
குற்றம் சாட்டப்பட்ட ஆண், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பதும், ஜவுளி நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அவர் மீது இணையத்தில் பலர் அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், கடந்த ஜனவரி 18 அன்று உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெண் மீது புகார்
இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த தீபக்கின் குடும்பத்தினர், இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண் பகிர்ந்த காணொளியால் தீபக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அது தற்கொலைக்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இளம்பெண் விளக்கம்
இதற்கிடையில் அவர் திட்டமிட்டுத்ஹான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று இளம்பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏசியாநெட் செய்தி ஊடகத்திற்கு அவர் பதிலளித்தபோது, “அந்த நபர் வேறொரு பெண்ணிடம் இதே போல் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்த பின்புதான் நான் காணொளியைப் பதிவு செய்யத் தொடங்கினேன். அவர் திட்டமிட்டுத்தான் என்மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஆனால், அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்வார் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
ஆண்கள் உரிமை ஆர்வலர்கள் கருத்து
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், ஆண்கள் உரிமைக்கான ஆர்வலர்கள் ஷிம்ஜிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிடும் மோகத்தில் அந்தப் பெண் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 42-year-old man named U Deepak died by suicide in Kerala on Sunday, January 18, sparking outrage. His death occurred days after he was accused of inappropriately touching a woman inside a bus. The woman posted a video on social media, which went viral.