கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற முகமூடி கும்பல், இன்று (செப்.27) காலை பணத்துடன் நாமக்கல் அருகே பிடிபட்டது. அப்போது காவல்துறை மேற்கொண்ட என்கவுன்டரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை, 4 பேரைக் கொண்ட முகமூடி கும்பல் வெள்ளை நிற காரில் சென்று கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சொந்தமான 3 ஏ.டி.எம்.களில் கேஸ் கட்டர்களை உபயோகித்துக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கேரள காவல்துறை விசாரணையில் இறங்கியது.
3 ஏ.டி.எம்.களில் இருந்து சுமார் ரூ. 65 லட்சம் கொள்ளை போனதாக தகவல் வெளியானது. இதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, `பாலக்காடு, கோயமுத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து தப்பிய முகமுடி கும்பல், கொள்ளையில் ஈடுபடுத்தப்பட்ட காரையும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் கன்டெய்னர் லாரியில் எடுத்துக்கொண்டு, இன்று காலை தமிழகத்துக்குள் நுழைந்தனர். கேரள காவல்துறையின் தகவலை அடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர் தமிழக காவல்துறையினர்.
இதை அடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்துகளை ஏற்படுத்துவிட்டு நில்லாமல் சென்ற ஒரு கன்டெய்னர் லாரி குறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து லாரியைக் கண்டுபிடித்த காவல்துறையினர், 2 கி.மீ தூரம் துரத்திச் சென்று லாரியை மடக்கிப் பிடித்தனர்.
கன்டெய்னர் லாரியில் மொத்தம் 7 நபர்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அப்போது அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற அந்நபர்களை பிடிக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது, ஒருவர் உயிரிழந்தார், ஐந்து நபர்கள் உயிருடன் பிடிபட்டனர்.
கன்டெய்னரில் இருந்த கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தையும், காரையும் மீட்ட காவல்துறையினர், உயிருடன் பிடிபட்ட ஐந்து நபர்களை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.