

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்புள்ள சர்ச்சைக்குரிய புத்தகத்தை சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைப்பதை கைவிடுவதாக கீழைக்காற்று பதிப்பகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகத்தில் ‘திருப்பரங்குன்றம் விவகாரம் - ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ரவுடியா’ என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அட்டைப்படத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து கேலிச் சித்திரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த அட்டைப்படம் அடங்கிய விளம்பரம் ஒன்றைக் கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டிருந்தது. மேலும் இப்புத்தகம் சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதையடுத்து இந்தப் புத்தகம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், நீதித்துறை நேர்மையைக் கேலி செய்து அவமதிப்பதாகவும், நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக உள்துறை செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“விற்பனைக்கு வைப்பதை கைவிடுகிறோம்”
இந்நிலையில், பபாசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க சர்ச்சைக்குரிய அப்புத்தகத்தைப் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைப்பதைக் கைவிடுவதாக கீழைக்காற்று பதிப்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த பதிவில் கூறியிருப்பதாவது:-
“ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ். எஸ். ரவுடியா?" என்ற தலைப்பில் திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பான ஒரு வெளியீடு கொண்டு வருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து இருந்தோம். அந்நூலின் முகப்பையும் எமது முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருந்தோம்.
அரசின் பல்வேறு துறைகளிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இத்தகைய வெளியீடு வெளிவருவது குறித்து பலரும் ஆர்வம் காட்டினீர்கள். எப்பொழுது கிடைக்கும் என்றும் விசாரித்துள்ளீர்கள்.
அதே நேரம், பாஜக சார்பில் எமது வெளியீடு குறித்து போலீசில் புகார் தந்துள்ளதாக தினமலர் நாளேடு தனது பத்திரிக்கையிலும் இணைய பக்கத்திலும் எழுதியுள்ளது. நாராயன் திருப்பதி உள்ளிட்ட சங்கி கும்பல் பதிப்பகத்தாரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என்றும் விஷத்தை கக்கி வருகின்றனர்.
இதன் மூலம் புத்தகத்தின் தலைப்பும், அதன் முகப்பும் சங்கிகளை கதற வைத்துள்ளது என்ற வகையில் எமக்கு மகிழ்ச்சியே. அதே நேரம் காவி பாசிஸ்ட்டுகள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு மட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வெளியீட்டை நடக்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்க விடக்கூடாது என்ற வகையில் கண்காட்சியை நடத்தும் பபாசி நிறுவனத்திற்கு அழுத்தம் தந்துள்ளனர்.
பபாசி நிர்வாகமும் சூழலை புரிந்து கொண்டு ஒரு வெளியீட்டிற்காக ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியை சிக்கலுக்கு உள்ளாகி விடக்கூடாது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் பங்குபெறும் இந்த புத்தக கண்காட்சி தடைபட்டால் அது அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்ற நோக்கத்தில் எமது பதிப்பகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் குறித்த புதிய வெளியீட்டை தற்போது தொடங்க உள்ள புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
முற்போக்காளர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரி அமைப்புகளுக்கும் பாசிசத்தின் அச்சுறுத்தல்கள் புதியன அல்ல. அதேநேரம் மாற்றுக் கருத்து இருப்பினும், ஒரு தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய கடமை அதன் உறுப்பினர்களுக்கு உண்டு. பபாசி உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் பபாசி நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த புத்தக கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்த எமது வெளியீட்டை விற்பனைக்கு வைப்பதை கைவிடுகிறோம்.
வாசகர்கள் விற்பனைக்கு வரும் நூல்களில் எதை தேர்ந்தெடுத்து வாங்கி படிப்பது என்பது அவர்களின் சுதந்திரம். இதைத்தான் பதிப்பகங்கள் விற்க வேண்டும் என்றோ, இதைத்தான் வாசகர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்றோ காவி பாசிசம் உத்தரவிடுகிறது. இப்படி எமது கருத்து சுதந்திரத்தை பறிப்பது தவறு என்பதை வாசகர்கள் முன்னும் வைக்கிறோம்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தின் இத்தகைய அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் எதிர் கொள்ள உள்ளோம். தொடர்ந்து முற்போக்கு நூல்களுக்கான முகவரியாக கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பில் களமாட உறுதியளிக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
Keezhaikkaatru Pathippagam has announced that it will not be putting a controversial book involving Justice G.R. Swaminathan on sale at the Chennai Book Fair.