கீழடி அகழாய்வுக்கு மேலும் ஒரு சான்று: பாஜகவை சாடும் முதல்வர் ஸ்டாலின்

வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், சரஸ்வதி நாகரிகத்தை பாஜக தொடர்ந்து ஊக்கவிக்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

கீழடி என்று வந்துவிட்டால், ஆதாரங்கள் இருந்தாலும் அவர்களுக்கேற்றார் போல் உண்மை இல்லாததால் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம் பின்வாங்குகிறது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பற்றி கடந்த 2014-15, 2015-16-ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிக்கையைச் சமர்ப்பித்த தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கடந்த மாதம் அறிவுறுத்தியது. இதுதொடர்பாக பெரும் விவாதம் எழுந்த நிலையில், மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கீழடி அகழாய்வு குறித்து பேசப்படும் அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஆய்வகமான பீடா அனலிடிக்ஸ் கீழடி அகழாய்வு மாதிரிகளைக் கொண்டு கரிமப் பகுப்பாய்வு மூலம் காலத்தினைக் கணக்கிட்டுள்ளது. இது கீழடி மாதிரிகள் பொது யுகத்துக்கும் முன்பு 6-ம் நூற்றாண்டு மாதிரிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியைப் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "கீழடி அகழாய்வு குறித்து கரிமப் பகுப்பாய்வு மூலம் காலம் கணக்கிடப்பட்ட மாதிரிகள், சர்வதேச ஆய்வகங்களிலிருந்து தரப்பட்ட ஏஎம்எஸ் அறிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகும், கூடுதல் ஆதாரம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். இதோ இதுதான் ஆதாரம்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இதற்கு நேர்மாறாக, மதிப்புக்குரிய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், சரஸ்வதி நாகரிகத்தை பாஜக தொடர்ந்து ஊக்கவிக்குகிறது. தமிழ் கலாசாரத்தின் பழமை மிகக் கடுமையாகப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பிறகும், அதைப் புறந்தள்ளிவிட்டு, உரிய ஆதாரமின்றி சரஸ்வதி நாகரிகத்தை முதன்மைப்படுத்துகிறார்கள்.

கீழடி மற்றும் தமிழ் மரபின் நீடித்த உண்மை என்று வந்துவிட்டால், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம் பின்வாங்குகிறது. ஆதாரங்கள் இல்லாமல் அல்ல... அவர்களுக்கு ஏற்றார் போல் உண்மை இல்லாததால், மறுக்கிறார்கள்.

நம் வரலாற்றை வெளிக்கொண்டு வர நூற்றாண்டுகளாகப் போராடினோம். இதை அழிக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்கள். உலகம் பார்க்கிறது. அதுபோல தான் நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in