
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை சந்திரசேகர் சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் ஐடி ஊழியரான கவின். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகரைச் சேர்ந்த இளம்பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித், கவினைப் படுகொலை செய்தார். தனது சகோதரியை கவின் காதலித்ததால், சுர்ஜித் இந்தப் படுகொலையைச் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை சரவணன், சுர்ஜித்தின் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கவினின் தந்தை சந்திரசேகர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னையில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இந்தச் சந்திப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். முதல்வரைச் சந்தித்த பிறகு கவினின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
"அண்ணன் (திருமாவளவன் எம்.பி.) தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தேன். குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. குற்றவாளிகள் ஓரிருவரைப் பிடிக்க வேண்டியுள்ளது. அவர்களைக் கைது செய்ய வேண்டும். முதல்வரிடம் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளேன். உடனடியாக நிறைவேற்றித் தருகிறேன் என்றார்.
தைரியமாக இருங்கள், எல்லா நடவடிக்கையும் எடுப்போம் என்றார். எங்களுடைய கோரிக்கையையும் நிறைவேற்றித் தருகிறேன் என்றும் கூறினார்" என்றார் சந்திரசேகர்.
திருமாவளவன் எம்.பி. குறிப்பிடுகையில், "கவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கையை மட்டுமே முதல்வரி டத்தில் நாங்கள் பேசி இருக்கிறோம். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம், வலியுறுத்தியும் வருகிறோம். நாங்கள் முதல்வரிடத்தில் ' மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு' என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்" என்றார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் திருமாவளவன் எம்.பி. பதிவிட்டுள்ளதாவது:
Kavin | Kavin's Father | Thirumavalavan | MK Stalin