
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசியதாக பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளதாக நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் பிராமணர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி நவம்பர் 3 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். இவரது குறிப்பிட்ட பேச்சு தெலுங்கர்கள் குறித்து மரியாதைக் குறைவாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கஸ்தூரியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமதித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.
இதனிடையே, கஸ்தூரி இன்று மாலை 3.30 மணியளவில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தனது பேச்சுக்கு விளக்கமளித்து அவர் பேசினார்.
"தெலுங்கு மக்களை இழிவாகப் பேசியதாக 100 சதவீதம் பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பெருவாரியான அளவில் தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். நான் புகுந்த வீடு தெலுங்கு பேசும் ஒரு வீடு. என்னுடையக் குழந்தைகள் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளையும் இரு கண்களாக மதித்து வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் தமிழச்சி.
ஆனால், இங்கு நான் இனவாதத்தை இங்கு பேசவில்லை. தெலுங்கு இனம் என்றோ தெலுங்கு மக்கள் என்றோ நான் சொல்லவில்லை" என்றார் கஸ்தூரி.