

தவெக கூட்டநெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குழந்தையைத் தூக்கிச் சென்ற அவருடைய கணவர் பணத்தைச் செலுத்தாமல் பிரச்னை செய்வதாக பெண்ணின் தாயார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டபோது, கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா ரூ. 20 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவத்தில் பிருந்தா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். பிருந்தாவின் உறவினர்கள், அவருடைய கணவர் மீது குற்றம்சாட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்கள்.
பிருந்தாவின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சுதா என்பவருக்கு மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். இவர்களில் மூன்றாவது பெண் பிள்ளை தான் பிருந்தா. இவர் விஜய் மாநாட்டுக்குச் சென்றபோது உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதில் இரு ஆண்டுகள் தான் பிருந்தாவுடன் இணைந்து அவருடைய கணவர் வாழ்ந்தார். அந்தப் பெண்ணுடன் அவர் வாழவே கிடையாது.
அந்தப் பெண்ணுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையும், பெண்ணும் சுதா வீட்டில் தான் வசித்து வந்தார்கள். பிருந்தா உயிரிழக்கும் வரை அவருடைய கணவர் சேர்ந்து வாழவில்லை.
பிருந்தா உயிரிழந்த பிறகுகூட, விஜய் மாநாட்டில் மனைவி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தும் அவர் வரவில்லை. உயிரிழந்தவர்களுக்குப் பணம் வழங்கப்படும் என்று அறிவித்த பிறகு, உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல்களைக் கேட்டு பிரச்னை செய்தார். பெண்ணை இழந்த துக்கத்தில் சுதா என்பவருக்கு என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை.
அந்த நேரத்தில் இவர்களிடமிருந்து பிருந்தாவின் கணவர் வலுக்கட்டாயமாகப் பிள்ளையை எடுத்துச் சென்றுவிட்டார். தான் கணவர் என்று கூறி, பிருந்தாவின் உடலையும் எரித்துவிட்டார்.
இருந்தாலும் பரவாயில்லை என, பிருந்தாவின் உயிரிழப்புக்காக வந்த பணத்தை பேத்தியின் பெயரில் செலுத்த வேண்டும் என அவரிடம் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பணம் எல்லாம் வந்து சேரும் வரை எதுவும் கூறாமல், பணத்தைப் பெற்ற பிறகு இவர்களுடைய பேத்தியின் பெயரில் பணத்தைச் செலுத்த முடியாது எனக் கூறியிருக்கிறார்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இதை மாற்றினார்கள். பிறகு, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்தார்கள். காவல் ஆய்வாளர் விசாரித்தபோது, தங்களுடைய பேத்தியின் பெயரில் பணத்தைச் செலுத்திவிட்டு எங்களுடைய தரப்பில் ஒருவரையும் அவருடைய (பிருந்தாவின் கணவர் - குழந்தையின் தந்தை) தரப்பில் ஒருவரையும் நாமினியாக (Nominee) சேர்க்க வேண்டும் என்றோம். இதற்கு பிருந்தாவின் கணவர் அப்படியெல்லாம் போட முடியாது என வழக்கறிஞரை அழைத்து வந்து தரக்குறைவாகப் பேசுகிறார்.
இவர்கள் ஒத்துழைக்கவில்லை, எனவே மாவட்ட ஆட்சியரைச் சென்று மீண்டும் சந்திக்குமாறு காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார். எனவே, இதுதொடர்பாக மனு கொடுக்க வந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
Karur Stampede | TVK Vijay | Brinda | Karur |