

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தால் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தது.
இதைத் தொடர்ந்து, கரூர் துயரச் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இரு அமைப்புகளின் விசாரணைக் கோப்புகளை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுமட்டுமின்றி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் என அக்டோபர் 13-ல் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய பிறகு, சிபிஐ தரப்பில் மீண்டும் ஒருமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கூட்டநெரிசல் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரித்தார்கள். சாட்சியங்கள், உள்ளூர்வாசிகள், கடைக்காரர்கள் உள்ளிட்டோருடன் சிபிஐ அதிகாரிகள் உரையாடினார்கள்.
விசாரணையின் பகுதியாக சென்னையை அடுத்த பனையூரிலுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொள்ளச் சென்றார்கள். தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Karur Stampede: CBI officers visit TVK Headquarters in Panaiyur and investigate CTR Nirmalkumar
Karur Stampede | TVK Vijay | CBI | CTR Nirmalkumar | TVK Head Quarters |