சிலரின் சுயநலத்தால் அழிவின் பாதையில் செல்கிறது காங்கிரஸ்: எம்.பி. ஜோதிமணி | Jothimani |

ராகுல் காந்தியின் அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது....
ஜோதிமணி (கோப்புப்படம்)
ஜோதிமணி (கோப்புப்படம்)ANI
2 min read

சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த சில நாள்களாகவே உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயைச் சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக அவரது திமுக விமர்சனம், காங்கிரஸ் மீது கூட்டணிக் கட்சியினரின் விமர்சனம் என அடுத்தடுத்து கட்சிக்குள் சலசலப்பு எழுந்தவண்ணம் உள்ளது. மறுபுறம் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு திமுகவுடன் காங்கிரஸ் அமைத்த தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்டுச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

ஜோதிமணியின் எக்ஸ் பதிவு

இது தொடர்பாக ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- “எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலைக் கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

பொறுப்பைச் சரியாக உணர்ந்துள்ளதா காங்கிரஸ்?

தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

அழிவின் பாதையில் செல்கிறது காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.

ராகுலுக்கு எதிரான பாதையில் செல்கிறது

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Congress MP Jothimani has said that the Tamil Nadu Congress is heading towards destruction due to the selfish interests of a few.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in