
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறையில் இருந்த கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனடிப்படையில் இருவரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 8 அன்று பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி இளவழகன் தள்ளுபடி செய்தார். அதேபோல் மதியழகன் தரப்பில் தாக்கல் செய்த ஜாமின் மனு, கடந்த அக்டோபர் 13 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் வழக்கை தேதி குறிப்பிட்டாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், மதியழகன், பவுன்ராஜின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் (அக்.14) முடிவடைந்தது. இதையடுத்து இருவரையும் திருச்சி மத்திய சிறையில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது, தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மறுத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு கலைக்கப்பட்டுவிட்டதால் காவல் நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று தவெக தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.