
கரூரில் விஜய் போன்ற பிரபலத்திற்குச் சிறிய இடத்தைக் கொடுத்தது சரியில்லை என்று பாஜக விசாரணைக் குழு ஆய்வுக்குப் பிறகு நடிகை ஹேமா மாலினி தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் அசம்பாவிதம் குறித்து ஆய்வு செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்.பிக்கள் கொண்ட குழு தமிழகம் வந்தது. நடிகையும் எம்.பியுமான ஹேமா மாலினி தலைமையிலான இந்தக் குழு, சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், உயிரிழந்தோர் வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோரிடம் விசாரித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஹேமா மாலினி,
“விஜயைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு மக்கள் திரண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபலமான நபர் வரும்போது அவ்வளவு சிறிய இடத்திற்கு அனுமதி கொடுத்தது சரியில்லை. முதலிலேயே பெரிய உரிய இடத்தில் பரப்புரைக்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். அரசு அதைச் செய்யவில்லை. இதற்கெல்லாம் மேலே விஜய் பெரிய வாகனத்தில் வந்திருக்கிறார். ஆனால் சாலை சிறியதாக இருந்திருக்கிறது. திடீரென்று மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சந்தேகத்தைக் கிளப்புகிறது. முதலிலேயே பெரிய இடத்திற்கு அனுமதி கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நாங்கள் வந்தோம். மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்தோம். இச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது மிகவும் சோகமான சம்பவம். மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இன்னும் வலியோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இப்படிப்பட்ட சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பதே எங்களது கேள்வி. எப்படி இப்படி ஒரு இடத்தில் இதை ஏற்பாடு செய்தார்கள் என்ற கேள்வியையே நாங்களும் கேட்கிறோம், பாதிக்கப்பட்ட மக்களும் கேட்கிறார்கள். அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. பொதுவாக அரசியல் பரப்புரைகள் கட்டுக்கோப்பான விதத்தில் நடைபெறும். மக்கள் முறையாக அமர்த்தப்படுவார்கள். அரசியல் தலைவர்கள் நின்று உரையாற்றுவார்கள். கரூரிலும் இத்தகைய கட்டமைப்பை மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என்பதே எனது எண்ணம்.
இதைவிடக் குறுகிய சாலைகளில் எல்லாம் ரோடுஷோ நடத்தி இருக்கிறோம். ஆனால் மக்கள் ஓரங்களில் நிற்பார்கள், காவலர்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தக் கூட விடாமல் அனுப்பி விடுவார்கள். ஆனால் கரூரில் அப்படி யாரும் செய்யவில்லை. நெருக்கடியான சூழல் ஏற்பட்டதால் தான் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. 1000 பேர் கூட ஒழுங்காக நிற்க முடியாத அந்த இடத்திற்கு 10,000 பேருக்கு அனுமதி கேட்கப்பட்டு, 30,000 பேர் வந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வளவு பிரபலமாக உள்ள விஜயும் அளவுக்கு அதிகமான மக்களை வர அனுமதித்திருக்கக் கூடாது. அது அவருடைய பொறுப்பு. “ இவ்வாறு பேசினார்.
அதன் பின்னர் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 8 பேர் கொண்ட விசாரணை குழு, கரூரில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு பொது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளோரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். அடுத்ததாக நாங்கள் அரசு அதிகாரிகளைச் சந்திக்கப் போகிறோம். அவர்களிடம் கேட்பதற்குக் கேள்விகளை வைத்துள்ளோம். இதே கேள்விகளை பரப்புரையை ஏற்பாடு செய்தவர்களிடமும் கேட்கவுள்ளோம். பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்பதுதான் உண்மை. பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு? இந்த விவகாரத்தின் மீது தலையீடு அற்ற நேர்மையான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்கொள்ள வேண்டும். ஏற்பாட்டாளர்கள் எங்கே தவறவிட்டார்கள். அரசு அதிகாரிகள் என்ன தவறு செய்தார்கள். இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. சம்பவ இடத்தில் காலணிகள் சிதறிக் கிடப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை.”
இவ்வாறு பேசினார்.