தேசத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார் கருணாநிதி: பிரதமர் மோடி

கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வைகளும், சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும்
தேசத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார் கருணாநிதி: பிரதமர் மோடி
ANI
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை வெளியிடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை தன் எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

`முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான திரு.கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம்.

இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஓர் உயர்ந்த ஆளுமை திரு.கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் வளர்ச்சி, தேசத்தின் முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் அவர் நாட்டம் கொண்டிருந்தார்.

ஓர் அரசியல் தலைவராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த திரு.கலைஞர் கருணாநிதி, மக்களால் பல தசாப்தங்களாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக சமூகம், கொள்கை, அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பன்முக திறமைகளைக் கொண்ட ஆளுமையாகத் திகழ்ந்த திரு.கலைஞர் கருணாநிதி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகள் மூலம் வெளிவந்து, அவருக்கு 'கலைஞர்' என்கிற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்த நினைவு நாணயம் வெளியிடப்படுவது, திரு கலைஞர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர் நிலைநிறுத்திய இலட்சியங்களை போற்றும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது ஆளுமையையும், அவர் மேற்கொண்ட பணியின் தாக்கத்தையும் நினைவூட்டுவதாக இருக்கும். இந்த முக்கியமான தருணத்தில், திரு.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.

2047-க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும்போது, ​​திரு.கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வைகளும், சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in