

விஜய் வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால் ஜெயமோகன் தான் எழுதிக் கொடுக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று இயக்குநர் கரு. பழனியப்பன் விமர்சித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் இளைஞரணி சார்பில் திமுக 75 அறிவுத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை நவம்பர் 8 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த பல்வேறு பேச்சாளர்கள் கருத்தரங்கில் உரையாற்றி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று (நவ.12) இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், திமுக நடத்துவது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாக மாறி இருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுத் திருவிழா நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் கரு. பழனியப்பன், விஜயின் அறிக்கைகளைப் பார்த்தால் ஏதோ நல்ல இலக்கியவாதி எழுதிக் கொடுத்ததுபோல் தெரிகிறது. எனக்கு என்னவோ ஜெயமோகன் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது என்று பேசினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
“என்னைத் திட்டுவதற்காகத்தான் கூட்டம் நடத்துகிறீர்கள். என்னைத் திட்டுவதுதான் உங்களுக்கு வேலை என்று சொல்கிறார் விஜய். இங்கிருக்கும் யாராவது விஜய் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால் அவருக்கும் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். இதிலிருந்து ஒரே ஒரு கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள். இன்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விஜயிடம் யாராவது சென்று ஐம்பெருங்குழு என்றால் என்ன? எண்பேராயம் என்றால் என்ன என்று யாராவது கேளுங்கள். பதில் சொல்லிவிட்டால் அதன் பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். யாரோ பயங்கரமான தீவிர இலக்கியவாதி அவருக்கு எழுதிக் கொடுக்கிறார். நசுங்காத நாகரிகம் என்றெல்லாம் அறிக்கையில் எழுதுகிறார்கள். எனக்கென்னவோ ரொம்ப நாள்களாகவே ஜெயமோகன் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது. நசுங்காத நாகரிகம் என்றெல்லாம் அவர்தானே எழுதுவார் என்று சந்தேகமாக இருக்கிறது.
விஜய் போல பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். காலம் ஒவ்வொருவரையும் உரிய நேரத்தில் செதுக்கும். விஜய் நடத்திய மாநாடுகளில் பார்த்தால் முன்பெல்லாம் அவருக்கு அருகில் யாரும் இருக்கமாட்டார்கள். எட்டடி தள்ளி நிற்பார்கள். விக்ரவாண்டி, மதுரை மாநாடுகளில் இப்படித்தான் இருந்தது. ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் விஜயின் தோள்களை உரசும்படி ஒருபுறம் பொதுச்செயலாளர் என். ஆனந்த், மறுபுறம் ஆதவ் அர்ஜுனா அமர்ந்திருந்தார்கள். விஜய்க்குத்தான் அருகில் மனிதர்கள் இருந்தாலே ஆகாதே என்று யோசிக்கும்போது இப்போதுதான் காலம் அவரையும் அடித்துச் செதுக்கத் தொடங்கியிருக்கிறது என்பது புரிகிறது” என்றார்.
Director Karu Palaniappan has criticized, saying, "Looking at the statements released by Vijay, I suspect that it is Jeyamohan who is writing for him.