கப்பலூர் சுங்கச்சாவடி பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை; நாளை பந்த்: போராட்டக் குழு

முன்னதாக, கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்புடைய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கப்பலூர் சுங்கச்சாவடி
கப்பலூர் சுங்கச்சாவடிANI
1 min read

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்புடைய பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லாததால், நாளை திட்டமிட்டபடி கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

மதுரை, திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் நகராட்சிக்குள்பட்டு கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்தச் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள், வணிகர்கள் நீண்ட நாள்களாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஜூலை 10 முதல் உள்ளூர் வாகன ஓட்டிகள் 50 சதவீதம் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு கோரி திருமங்கலத்தில் வரும் 30 அன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சுங்கக் கட்டணத்திலிருந்து உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். 7 கி.மீ. சுற்றுவட்டாரத்திலுள்ள உள்ளூர் வாசிகளுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உரிய ஆவணங்கள் பரிசோதனையின் பிறகே மக்களுக்கு சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பேச்சுவார்த்தை 100 சதவீதம் வெற்றி பெற்றதாக அவர் அறிவித்துவிட்டுச் சென்றார்.

ஆனால், போராட்டக் குழு பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என்று பேட்டியளித்தார். மேலும், திட்டமிட்டபடி நாளை முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

போராட்டக் குழுவைச் சேர்ந்த கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"2020-ல் கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்த நடைமுறை பற்றி யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. திருமங்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன், 1.5 கி.மீ. தூரத்தில் இந்த சுங்கச் சாவடியைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால், நிறைய போக்குவரத்துப் பிரச்னை ஏற்படுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக சென்றால், உடனடியாக சுங்கச் சாவடியைக் கடக்க முடியவில்லை. இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை வரத் தொடங்கிவிட்டால், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகும்.

இவர்கள் கூறும் தீர்வு என்னவென்றால் முதல் மற்றும் 10-வது கேட்டில் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த இரு கேட்டில் எத்தனை வண்டிகள் செல்ல முடியும்?. எனவே, சிரமம் பார்க்காமல் சுங்கச்சாவடியை நகர்த்தி வைத்தால், ஒட்டுமொத்த பிரச்னைக்கும் தீர்வு காணலாம். எனவே, திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in