
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலர் விற்பனை அமோகமாக நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தின் வசந்த திருவிழாவான ஓணம், தமிழ்நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க மக்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலத்தை வரைவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அத்தப்பூ கோலத்திற்காக கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தைக்கு ஆயிரம் டன் பூக்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் 300 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனை ஆகியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்குவதற்காக கேரள வியாபாரிகளும் குவிந்தனர். சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளாமனோர் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
சென்ற ஆண்டு வயநாடு வெள்ளம் காரணமாக ஓணம் கொண்டாட்டம் களையிழந்ததால் ஏராளமான பூக்கள் விற்பனை ஆகாமல் வியாபாரிகள் நஷ்டத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பூக்களின் விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தோவாளை மலர் சந்தையில் விற்பனை ஆகாமல் மீதமிருந்த பூக்களைக் கொண்டு வியாபாரிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடினர். 100 வியாபாரிகள் இணைந்து 500 கிலோ பூக்களைக் கொண்டு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
Onam | Onam Celebrations | Flower Sales | Kanyakumari