
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்துகொண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது திமுகவின் வாதம் குறித்து விமர்சனம் வைத்த அவர் பேசியதாவது:
"நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்று கேட்கும் வாதமே தவறு. அவர்களுடையக் கணக்கீடு எதன் அடிப்படையில் வருகிறது என்றே தெரியவில்லை. ஒருவிதமாக ஏளனமாகச் சொல்ல வேண்டுமானால், இங்கு கோவை மக்கள் பலர் உள்ளார்கள். சென்னையைச் சேர்ந்தவர்களும் உள்ளீர்கள். கோவையும் சென்னையும் தமிழ்நாட்டுக்கு அதிக வரி கொடுக்கிறது.
அரியலூரில் உள்ளவர்களும் கோவில்பட்டியில் உள்ளவர்களும் கேட்க வேண்டும். எங்கள் மீது என்ன செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால், இவர்கள் இருவரும் (கோவை, சென்னை) நாங்கள் தான் நிறைய வரி கொடுக்கிறோம், எங்களுக்கு தான் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டு. கோவில்பட்டி எக்கேடு கெட்டால் என்ன, அவர்களுக்குச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
பாரத நாட்டில் அந்த மாதிரியான கொள்கை இல்லை. எனவே, குதர்கமாகப் பேசக்கூடியவர்களுக்கு நான் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் செய்வதற்கு ஏராளம் இருந்தாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என திசை திருப்பல் முயற்சிகள் நடக்கின்றன" என்று நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எக்ஸ் தளப் பக்கத்தில் இதற்குப் பதிலளித்துள்ளார்.
"நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.