

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷைக் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மலைப் பணியிடைநீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 25-ல் பூச்சிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பேக்கரி உரிமையாளர் சிவகுமார் என்பவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. பேக்கரி உரிமையாளர் விநியோகித்த கேக்கில் நல்ல தரத்தில் இல்லை என்பதால் எழுந்த பிரச்னை. இதுவே கைக்கலப்பாகவும் மாறியுள்ளது. சிவகுமார் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் புகாரளித்துள்ளார். ஆகஸ்ட் 20 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு மாவட்ட துணை கண்காணிப்பாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறி அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல். செப்டம்பர் 8 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 22 வரை நீதிமன்றக் காவில் வைக்க உத்தரவிட்டார்.
ஆனால், அடுத்த நாளே இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் எஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே மாவட்ட துணைக் கண்காணிப்பாளரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது என்பதை அறிந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் அதை ரத்து செய்தார். மேலும், இதுதொடர்பாக விசாரிக்குமாறு பதிவாளருக்கு (ரெஜிஸ்டிரர்) உத்தரவிட்டார் நீதிபதி சதீஷ் குமார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கைது உத்தரவைப் பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடைநீக்கம் செய்து உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அரியலூர் லோக் அதாலத் தலைவராக செம்மல் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
Madras High Court | Kanchipuram Judge | Kanchipuram DSP |