
மாநிலங்களவை எம்.பி.யாக இன்று (ஜூலை 25) கமல் ஹாசன் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான வைகோ, எம். சண்முகம், எம்.எம். அப்துல்லா, பி. வில்சன், அன்புமணி ராமதாஸ், எஸ். சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) முடிவுக்கு வந்தது.
முன்னதாக, காலியாகவிருந்த இந்த 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்காக திமுக கூட்டணி சார்பில் எஸ்.ஆர். சிவலிங்கம், பி. வில்சன், ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக சார்பில் ஐ.எஸ். இன்பதுரை, எம். தனபால் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக முறைப்படி இன்று (ஜூலை 25) கமல் ஹாசன் பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கவிஞர் சல்மா, சிவலிங்கம், வில்சன் ஆகியோரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். குறிப்பாக, இவர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.
அதேநேரம், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ். இன்பதுரை, எம். தனபால் ஆகியோர் எம்.பி.க்களாக இன்னும் பதவியேற்கவில்லை.
இன்று காலை (ஜூலை 25) நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனிடம் எம்.பி.யாக பதவியேற்கவுள்ளது குறித்து பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு,
`நான் பெருமையாக உணர்கிறேன், வந்து பேசுகிறேன்’ என்றார்.