ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மநீம ஒரு குழுவை உருவாக்கி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, இதன் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்தியா முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மத்திய அரசின் இந்த முடிவை மநீம வன்மையாகக் கண்டிக்கிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆகக் குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்ய கிராம சபை, ஏரியா சபை ஆகியவற்றை மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
வேளாண் விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக சட்டப்பூர்வமாக்க வேண்டும்.