
மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக இன்று (ஜூன் 4) வேட்புமனுத்தாக்கல் செய்ய கமல் ஹாசன் திட்டமிட்டிருந்த நிலையில், தக் லைஃப் படத்தின் வெளியீடு காரணமாக வேட்புமனுத்தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல் ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி அவருக்கும், அவரது தக் லைஃப் படத்திற்கும் கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், தக் லைஃப் படம் வெளியாகும் வரை மாநிலங்களை எம்.பி. பதவிக்கான வேட்பு மனுத்தாக்கலை அவர் ஒத்திவைத்துள்ளாதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், அஸ்ஸாமிலும் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் அறிவிக்கையை கடந்த மே 26 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி தமிழகத்தின் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ல் முடிவுக்கு வருகிறது.
இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். 2024 மக்களவை தேர்தல் சமயத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, கமல் ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூன் 2) தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் ஜூன் 9 கடைசி நாளாகும். 6 பதவிகளுக்கு 6 வேட்பாளர்கள் (திமுக கூட்டணி – 4 மற்றும் அதிமுக - 2) களமிறங்கும் நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இன்று (ஜூன் 4) கமல் ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே, கன்னட மொழி குறித்த தன் கருத்துக்கு கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து சுமூகமாகப் பேசி முடிவெடுத்துக்கொள்வதாக கர்நாடக் திரைப்பட வர்த்தக சபை நேற்று (ஜூன் 3) அறிவித்தது. இதனால் கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை நாளை (ஜூன் 5) வெளியிடுவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், கமல் ஹாசனின் வேட்புமனுத்தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்படுகிறது.