கல்வியில் சிறந்த தமிழ்நாடு: பங்கேற்ற திரைப் பிரபலங்கள் | Mysskin | Prem Kumar | Thiyagarajan Kumararaja | Mari Selvaraj

இயக்குநர்கள் பிரேம் குமார், மிஸ்கின், தியாகராஜன் குமாரராஜா, மாரி செல்வராஜ் ஆகியோர் பேச்சு...
கல்வியில் சிறந்த தமிழ்நாடு: பங்கேற்ற திரைப் பிரபலங்கள் | Mysskin | Prem Kumar | Thiyagarajan Kumararaja | Mari Selvaraj
3 min read

தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பல்வேறு திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக அரசு கல்வித்துறை சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவ்விழாவில் முதலவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் திரைத்துறை பிரபலங்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பிரேம் குமார், “குழந்தைகளைப் பார்க்கும்போது ஆசையாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எங்கள் காலத்தில் அரசுப் பள்ளிகளையும், அதில் வழங்கப்படும் உணவுகளையும் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால் இன்று, அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிக்க என்னென்ன கிடைக்கிறது என்பதைப் பார்க்கும்போது அரசுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. நான் படிக்கும்போது ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற முதுமொழியைச் சொல்வார்கள். பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமன்றி கல்வி அறிவுக்கும் பெயர்போன மாநிலம். நம் முதலமைச்சர் ‘படியுங்கள், படியுங்கள், படியுங்கள். படிப்பில் மட்டும் கவனத்தை வையுங்கள். மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார். இப்படி ஒரு வார்த்தையை யார் சொன்னாலும் உற்சாகமாக இருக்கும். அதை நம் முதல்வர் சொல்லும்போது அதன் முக்கியத்துவம் நமக்கு நன்றாகப் புரிகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்து கொடுக்கிறார். படிக்க வேண்டியது மட்டும்தான் மாணவர்களின் கடமை” என்று பேசினார்.

பின்னர் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இந்தி போராட்டம் நடைபெற்றபோது ஒரு கையெழுத்து பிரதியை அண்ணா படித்தாராம். அதைப் பார்த்துவிட்டு இவ்வளவு அழகாக எழுதும் இளைஞரை நான் பார்க்க வேண்டும் என்றாராம். அவரைக் கூப்பிட்டுக் கொண்டு போய் நிறுத்தும்போது 14 வயது சிறுவன் நின்றாராரம். அவர்தான் கருணாநிதி. அண்ணா அதிர்ந்துபோனாராம். இதை எழுதியவருக்கு 30 வயது இருக்கும் என்று நினைத்தேன். 14 வயது தானா. நீ பள்ளிக்குப் போகவில்லையா என்று அண்ணா கேட்டாராம். அதற்கு கருணாநிதி நான் பள்ளிக்குப் போவதில்லை என்றாராம். அண்ணா கேட்டதும், நீ பள்ளிக்குப் போ அதற்குப் பிறகுதான் அரசியல், அதற்குப் பிறகுதான் போராட்டம் என்று சொன்னாராம். அண்ணா சொன்னால் தட்ட முடியாது. ஆனால் வீட்டுக்கு வந்த யோசித்த கருணாநிதி, அண்ணாவுக்குத் தெரியாமல் பள்ளிக்குப் போகாமலேயே இருந்தார். அவர் அப்படிப் பள்ளிக்குப் போகாமல் வாழ்ந்ததால்தான் நீங்கள் எல்லாம் பள்ளிக்குப் போகிறீர்கள். இதை மறக்கவே கூடாது. நாங்கள் படித்துக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் எப்போதும் முதல்வரின் குடும்பத்தில் உள்ளவர்கள். நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். நாங்கள் அரசுப் பள்ளியில் படித்தபோது எங்களுக்கு எந்த உறுதுணையும் இல்லை. ரொம்ப கஷ்டபட்டு வந்தோம். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் இந்த அரசும் முதல்வரும் என் இதயத்துக்குச் சொந்தமான தம்பி உதயநிதியும், புன்னகை அரசரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவு நல்ல திட்டங்களை உங்களுக்குப் படிப்பதற்காகக் கொடுக்கிறார்கள். நீங்கள் படிக்க வேண்டும். இனி வாழ்க்கையில் உங்களுக்கு எந்த முட்டுக்கட்டையும் கிடையாது. உங்களுக்கான எல்லா செலவுகளையும் எல்லா பொறுப்புகளையும் தாய் தந்தை போல் முதல்வர் பார்த்துக் கொள்கிறார். அதேபோல் எந்த அரசும் செய்யாத காரியமான, இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்குத் தனிப்பட்ட முறையாக நன்றி கூறுகிறேன்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, “கல்வியைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதன் கடைசி நான்கு வரிகளில் “கல்வியைக் கீழ் இருப்பவன் கற்றுவிட்டால் மேல் இருப்பவனும் அவனுடன் பழகும் வாய்ப்பைக் கொடுக்கும்” என்று சொல்கிறது. கல்வி என்பது என்ன என்று விவேகசிந்தாமணி தெளிவாகக் கூறுகிறது. ‘வெள்ளத்தால் வேகாது’ என்கிறது. என்னிடம் உள்ள கல்வி அடுத்தவரை நமக்குச் சமமாக மாற்றும். அல்லது நம்மை அடுத்தவர்க்குச் சமமாக ஏற்றும். இப்படிப்பட்ட கல்வியைத்தான் கற்கக் கூடாது என்று பழங்காலத்தில் இருந்து தடுத்துக் கொண்டே வருகிறார்கள். தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த நாம் ஏன் நடுவில் கல்வியை இழந்தோம் என்பதை யோசிக்க வேண்டும். கல்வியைச் சார்ந்து இரண்டு விதமான கருத்தியல்கள் உண்டு. எல்லாரும் படிக்க வேண்டும் என்று பேசுவது திராவிட கருத்தியல். அதைத்தான் பாண்டிய மன்னன் முதல் பாரதியார் வரை குறிப்பிடுகிறார்கள். இன்னொன்று ஆரிய கருத்தியல். அது கல்வி கற்க வரும் மாணவனை சாதியின் அடிப்படையில் மறுத்து ஏகலைவனுக்குக் கட்டை விரலைக் கேட்டது. கர்ணனுக்குக் கல்வி தர மறுத்தது. துரோணாச்சாரியார், கிருபாச்சாரியாரில் தொடங்கி இப்போது ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதைத் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கொள்கைக்கு எதிராக, சமத்துவம் இருக்கக் கூடாத இடத்தில், சமூக நீதியும் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சியில் இருந்து படிப்பதற்கு எத்தனை திட்டங்களைக் கொடுக்க முடியுமோ, அவை அனைத்தையும் கொடுத்து வருகிறது.

காலை உணவு தருகிறார்கள். நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களைக் கொடுத்து எப்படியாவது படித்துவிடுங்கள் என்கிறார்கள். இலவச பேருந்து பயணம் தருகிறார்கள், மடிக்கணினி கொடுக்கிறார்கள், மிதிவண்டி கொடுக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு, முன்பு ஏகலைவனுக்குக் கட்டை விரலைக் கேட்டதுபோல், கர்ணனுக்கு மறந்து போக வேண்டும் என்று சாபம் கொடுத்தது போல் உங்களுக்குப் புதிய கல்விக் கொள்கை என்று ஒன்று கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.

இதைத் தடுத்து, ஏற்க மாட்டோம் என்று சொல்வதற்காக நமக்கு நியாயமாக வர வேண்டிய ரூ. 2,150 கோடியைத் தர மறுக்கிறார்கள். இப்போது நமக்கு உடன்பாடு இல்லாத, கொள்கை முரண்பாடு உள்ள கட்சி ஒன்றியத்தை ஆளும்போது, எந்த உதவியும் இல்லாமல், கைகளையும் கால்களையும் கட்டித் தண்ணீரில் போட்டாலும் தானும் நீந்தி தமிழ்நாட்டையும் கரை சேர்க்கப் போராடும் முதல்வருக்கு நன்றி” என்று பேசினார்.

அதன் பின் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “வாழை படம் வெளியானபோது முதலமைச்சர் படத்தை அமெரிக்காவில் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களை அழைப்பார் என்று எனக்குச் சொன்னார்கள். நான் அதற்குக் காத்திருந்தேன். வாழைக்காக தமிழக முதல்வர் என்ன சொல்வார் என்று காத்திருந்தேன். அன்றைக்கு இந்தப் படம் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. அதன் உச்சமாக கதையில் வந்த சிறுவனிடம் முதலமைச்சரே பேசியதுபோல் எனக்குத் தோன்றியது. வாழை படத்தில் அந்தச் சிறுவன் பசியில் வாழைப் பழத்தைத் திருடுவான். நானும் முதன்முதலில் திருட்டுப் பழக்கத்தைப் பசியால்தான் கற்றுக் கொண்டேன். என் பள்ளிக்கும் என் வீட்டுக்கு 4 கி.மீ இருக்கும். பசியோடு நடந்து போவோம். அப்போது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து பழங்கங்களைப் பறித்துச் சாப்பிடுவோம். என்னுடன் படித்த பலர் பசியால் பள்ளிப் படிப்பை விட்டார்கள். தூரமாக இருந்த பள்ளிகளுக்குப் பசியோடு சென்று வர முடியாது. அதனாலேயே படிப்பை விட்டார்கள். அப்படி இருந்தபோது காலை உணவுத் திட்டம் பற்றிய அறிவிப்பு வந்த நாளில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in