கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க சிபிஐக்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று (நவ.20) உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்திய 216 நபர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து விஷச்சாராயம் அருந்தியவர்களில் 67 நபர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனையை தடுக்கக் தவறிய தமிழக அரசுக்குப் பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து விஷச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அத்துடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க சிபிஐக்கு காலக்கெடு விதிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in