மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல்: முதல்வர் அறிவிப்பு

"உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை."
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல்: முதல்வர் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது இன்று மாலை விவாதம் நடைபெற்றது. பாமக உறுப்பினர் ஜி.கே. மணி, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றார். இந்தத் திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது:

"கடந்த சில நாள்களாகவே சட்டப்பேரவை கூடியதிலிருந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கி, இந்தக் குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in