கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று..: முதல்வர் ஸ்டாலின் வேதனை!

அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்
கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று..: முதல்வர் ஸ்டாலின் வேதனை!
ANI
1 min read

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் குறித்துத் தன் எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன். இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இச்சம்பவம் குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in