
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைந்த கலைஞர் கருணாநிதி - பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர் மு.க. முத்து. இவர் பிறந்தபோதே, தாய் பத்மாவதியை இழந்தார். கலைஞர் கருணாநிதி தனது தந்தை முத்துவேல் நினைவாக இவருக்கு மு.க. முத்து எனப் பெயர் சூட்டினார்.
இவர் கலைஞர் கருணாநிதியின் கலையுலக வாரிசாகப் பார்க்கப்பட்டார். இவர் இளமைக் காலங்களில் நாடகங்கள் மூலம் திராவிட இயக்க கருத்துகளை முன்வைத்து வந்தார். பின்னாளில் 1970-ல் திறைத் துறையிலும் அறிமுகமானார் மு.க. முத்து.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு படங்கள் மூலமாக தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் சொந்தக் குரலில் பாடக்கூடிய திறனும் கொண்டவர். இவர்கள் நடிக்கும் படங்களில் இவரே பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய தோற்றம் மற்றும் உடல்மொழி எம்ஜிஆர்-ஐ ஒட்டியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
77 வயதான மு.க. முத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மு.க. முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மு.க. முத்துவின் உடல் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மு.க. முத்துவின் மறைவையை அடுத்து, முதல்வரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தந்தையர்க்கு இணையாக தன் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, தனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் தன்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர் என மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
MK Muthu | M.K. Muthu | MK Stalin | Kalaignar Karunanidhi |