

முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கோரிக்கை வைக்கும்போது, திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் கலைஞர் கருணாநிதி சாம்பியனாகத் திகழ்ந்தவர் என்று கூறினார். மேலும், தேர்தலில் தோல்வியைச் சந்திக்காத கலைஞர் கருணாநிதி, ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்றும் கூறினார்.
அரசியல் சாதனைகளைத் தாண்டி கலை, இலக்கியம், திரைத் துறை என பன்முகங்களைக் கொண்டவர் என்றும் கலைஞர் கருணாநிதி குறித்து பேசும்போது தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.
இறுதியாக, கலைஞர் கருணாநிதியின் சமூக நீதிப் போராட்டங்களுக்காக, அவர் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் திமுக சார்பில் மக்களவையில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ராஜகோபாலச்சாரி, ராதாகிருஷ்ணன், சிவி ராமன், காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம், எம்எஸ் சுப்புலட்சுமி, சி. சுப்ரமணியம், எம்எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், நிச்சயம் அரசியல் களத்தில் அது எதிரொலிக்கும். அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுகவின் இந்தக் கோரிக்கை பேசுபொருளாகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்பு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
மத்தியில் திமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டிலிருக்கும் பாஜக ஆட்சியில் இருப்பதால், கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அடுத்த சில நாள்களுக்கு நிச்சயம் பேசுபொருளாக இருக்கும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
Kalaignar Karunanidhi | Karunanidhi | M Karunanidhi | Thamizhachi Thangapandian | Lok Sabha | Parliament | DMK | Bharat Ratna |