கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது கவிஞர் மு. மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பெயரில் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்றும், விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சமும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் கடந்த 2022-ல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்காக விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸுக்கு கடந்த 2022-ல் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது கவிஞர் மு. மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு வழங்கிட எஸ்.பி. முத்துராமன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்விருதினை வரும் 30 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
முன்னதாக, கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 11-ல் உத்தரவிட்டிருந்தார்.
மு. மேத்தா:
கவிஞர் முகமது மேத்தா பெரியகுளத்தில் 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் பிறந்தவர். தமிழ் மீது தணியாத பற்று உடையவர்; சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் அன்பைப் பெற்றவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், எனப் பல்வேறு நூல்களையும் படைத்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமது தனி முத்திரைகளைத் திறம்படப் பதித்தவர்.
அவர் எழுதிய, “ஊர்வலம்” எனும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” எனும் கவிதை நூலுக்கு, "சாகித்ய அகாடமி" விருதும் பெற்ற பெருமைக்குரியவர். தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் கவிஞர் மு. மேத்தாவைப் போற்றி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பி. சுசீலா:
இசைக்குயில் பி.சுசீலா 1935-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13-ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். இசை மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கிடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்று 1950-ஆம் ஆண்டு சென்னை வானொலியில் ’பாப்பா மலர்’ எனும் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார்.
தேனினும் இனிய தனது குரலால் அனைவரையும் கவர்ந்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தொடர்ந்து பாடி சாதனைகள் படைத்தவர். இசையுலகத்தினராலும், ரசிகர்களாலும் "இசைக்குயில்" என்றும், "மெல்லிசை அரசி" என்றும், "கான கோகிலா" என்றும் பாராட்டப்பட்டவர் அவர்.
சிறந்த பின்னணிப் பாடகி எனத் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், ஒன்றிய அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளதோடு, இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியவர். இசைக்குத் தன்னையே அர்ப்பணித்து இன்றளவும் தனித்துவமாய் விளங்கிடும் அம்மையார் பி. சுசீலாவைப் பெருமைப்படுத்தும் வகையில் விருது வழங்கப்படுகிறது.