தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி மு. மேத்தா, பி. சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பெயரில் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்றும், விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சமும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் கடந்த 2022-ல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்காக விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸுக்கு கடந்த 2022-ல் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது கவிஞர் மு. மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு வழங்கிட எஸ்.பி. முத்துராமன் தலைமையிலான குழு பரிந்துரைத்தது.
இந்நிலையில் இன்று மு. மேத்தா, பி. சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்த சந்திப்பின் போது பி. சுசீலா முதல்வர் ஸ்டாலின் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினார்.