
ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தனது தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார் கோவில்பட்டி எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ.
த.செ. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரது நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த அக்.10-ல் வெளியானது.
வேட்டையன் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவரும் வேளையில், அத்திரைப்படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த காந்தி நகர் அரசுப் பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ,
`காந்தி நகர் அரசுப் பள்ளியில் படிக்கின்றன மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும். அடுத்த நிலையில் உள்ள மாணவர்கள் அந்த அரசுப் பள்ளியில் சேரத் தயக்கம் காட்டுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல நிலையில் விருதைப் பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இதனால் மனப்புழுக்கம் ஏற்படும்.
இதை ஒரு சாதாரணமான காட்சியாக நினைக்காமல், நல்ல நிலையில் இயங்கிவரும் ஒரு கல்வி நிலையம் குறித்து, சமுதாயத்தில் தவறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை உணர்ந்து படக்குழுவினர் காந்தி நகர் அரசுப் பள்ளி குறித்து இடம்பெற்றுள்ள காட்சிகளை விரைவில் நீக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்’ என்றார்.