

ஈரோட்டில் நாளை நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள், காவல்துறையின் நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவற்றை அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நான்கே நாள்களுக்குள் மிக பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக எல்லா துறைகளிலும் அலுவலர்கள் அத்தனை பேரும் அதற்கான ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள். இந்த கடுமையான பணியை முடித்து சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எங்களை பொறுத்தவரையிலும் தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நீங்களே அதைப்பற்றி பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லலாம். குறிப்பாக காவல்துறை உடைய கண்காணிப்பாளர்கள் இங்கே காலையிலே பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களோ அவற்றையும் நிறைவேற்றி, கூடுதலாகவே செய்யப்பட்டிருக்கிறது. 14 ஆம்புலன்ஸ், 58 மருத்துவர்கள் அதற்கான செவிலியர்கள் உட்பட இருக்கிறார்கள். அவசர சிகிச்சைக்காகவே தனியாகவே அங்கங்கே முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
குடிநீரை பொறுத்தவரையிலும் தேவையான அளவிற்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக 10 லாரிகளை தண்ணீரை கொண்டு வந்து ஆங்காங்கே வருகின்றவர்களுக்கும் அந்த குடிநீரை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டிரோன் என்பது ஐந்து டிரோன்கள் அங்கே கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 60 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
பத்திரிக்கையாளருக்கு தனியாகவே இடம் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் இந்த நிகழ்ச்சியிலே சிறப்பாக தங்கள் பணிகளை நிறைவேற்றி நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது.
தவெக தலைவர் விஜய் நிற்கும் இடத்தில் இதுவரையிலும் இந்த அளவிற்கு பாதுகாப்பு அரண் அமைத்திருக்க முடியாது. இதை ஒரு மாடலாகவே அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்க கியூஆர் கோடு தேவையில்லை. எவ்வளவு மக்கள் பொதுமக்கள் தாங்களாக வந்து மகிழ்ச்சியோடு செல்லலாம். ஈரோட்டைத் தவிர பிற மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்தால் முறையான பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறை வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்” என்றார்.
TVK Leader K.A. Sengottaiyan, stated that arrangements have been made for all the people to participate in the party's public meeting to be held in Erode tomorrow.