

அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977-ல் அதிமுக போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அதன்பின்னர் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகத் தொடர்ந்து இயங்கி வந்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வேளாண்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 5 அன்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் விலக்கப்பட்டவர்களையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார். இதனால் அடுத்த நாளே அதிமுக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, நேற்று (அக்.30) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து வந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்குச் செங்கோட்டையன் மரியாதை செலுத்தியிருந்தார். இது தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிலையில், இதுகுறித்து கேட்டபோது, தலைமையின் கருத்தை முழுமையாகக் கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது கூறியிருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்குவதாக இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami has announced the expulsion of senior leader Sengottaiyan from the party.
