

தேர்தலுக்கு முன் தவெகவை விட்டு வேறு கட்சிக்குச் செல்ல உள்ளதாக வெளியான செய்திக்குக் கண்டனம் தெரிவித்து செங்கோட்டையன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் 27 அன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் ஏற்பாட்டில் மாநாடு
இதைத் தொடர்ந்து டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய் பங்கேற்ற பிரமாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் கலந்துகொண்ட பெரிய அளவிலான பொதுக்கூட்டமாக அது வெற்றிகரமாக நடந்தேறியது. மேலும் தொடர்ந்து தவெக சார்பாக மூத்த அரசியல்வாதியாக அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கு அதிருப்தியா?
இதற்கிடையில் நாளிதழ்களில் செங்கோட்டையன் தவெகவில் உரிய மரியாதை வழங்கப்படாமல் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தேர்தலுக்கு முன் வேறு கட்சிக்குச் செல்ல ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் வெளியான தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவிலும் செங்கோட்டையன் இடம்பெறவில்லை. பிரசாரக் குழுவிலும் மூன்றாம் இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் கடுமையான புழுக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
நாளிதழ் செய்திக்கு மறுப்பு
இந்நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து செங்கோட்டையன் சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Sengottaiyan has published a post condemning the news that he is planning to leave the TVK and join another party before the election.