ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு | Sengottaiyan | D Jayakumar |

ஆட்சியில் பங்கு என்று நாங்கள் அறிவித்ததால் தான் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள்....
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)
1 min read

ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம் ஏனென்றால் அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொடக்கத்தில் திமுகவை மட்டும் விமர்சித்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இப்போது அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். அதன்படி நேற்று (மார்ச் 4) தஞ்சையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விஜய், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து தனக்கு எதிராகச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

ஜெயக்குமார் விமர்சனம்

இதுகுறித்து சென்னையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசுவது மிகவும் சுலபம். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். தொடக்கத்தில் விஜய் என்ன சொன்னார்? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருகிறோம் என்றார். யாராவது போனார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

செங்கோட்டையன் அழைப்பு

இதற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்திப்பில் அவர் கூறியதாவது: ”ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. அவர் மகனுக்கு மட்டும்தான் கிடைக்கும். ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். அவர் என் நல்ல நண்பர் என்பதால் அவருடைய கருத்துக்கெல்லாம் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உதிப்பதை எல்லாம் எடுத்துச் சொல்லக் கூடாது. என்றைக்குமே தனித்து நின்று முதலமைச்சர் ஆவதற்கு மட்டுமே விஜய் இருக்கிறாரே தவிர, மற்றவர்கள் வாக்கு கேட்கின்ற அளவுக்கு அவர் இல்லை.

தவெகாவால் காங்கிரஸுக்கு பலன்

தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரஸுக்கு பயன் கிடைத்திருக்கிறது. எங்களிடம் வந்துவிடுவோம் எனக் கூறி காங்கிரஸ் கூடுதல் சீட்டுகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் எங்களைக் காட்டிக் கூடுதல் சீட்டுகளைப் பெறும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று நாங்கள் அறிவித்ததால் தான் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள். தவெக தனித்துப் போட்டியிடுமா, வலிமையான கூட்டணியை அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

Summary

Former Minister Sengottaiyan has said that D Jayakumar can join TVK if he wants because he will not get a chance in the AIADMK.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in