செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி: விஜய் அறிவிப்பு | TVK Vijay | KA Sengottaiyan |

"கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்படுகிறார்."
KA Sengottaiyan appointed as Chief Coordinator in TVK, announced Party Chief Vijay
செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிபடம்: https://x.com/TVKPartyHQ
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்து விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். பனையூரிலுள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்கள். செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை விஜய் வாழ்த்தி வரவேற்றார்.

கட்சியில் இணைந்த பிறகு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கட்சியில் என்ன பதவி என்று கேட்டபோது, இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தவெக நிர்வாகிகள் கூறினார்கள். இதன்படி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி குறித்த அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளதாவது:

"தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

மேலும் கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

KA Sengottaiyan appointed as Chief Coordinator in TVK, announced Party Chief Vijay

TVK Vijay | KA Sengottaiyan | TVK | Tamilaga Vettri Kazhagam | Sengottaiyan |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in