
கரூர் கூட்டநெரிசல் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நீதி வெல்லும் என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டம் மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கரூர் கூட்டநெரிசல் தொடர்புடைய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஷ்வரி மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவை விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு வசம் இருக்கும் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொள்ளாத இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுதாரர்களில் இருவர் உண்மையில் மனுக்களைத் தாக்கல் செய்யவே இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் வைத்தார். இருவர் தாக்கல் செய்யாத மனுக்களின் மீதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தீவிரப் பிரச்னை என்றும் நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி கூறுகையில், "நாங்கள் இதைக் கவனத்தில் கொள்கிறோம். ஆனால், சிபிஐ விசாரணை கோரி வேறு சில மனுக்களும் உள்ளன. எனவே, இது (மனுதாரரின் ஒப்புதல் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து) எந்தப் பாதிப்பையும் உண்டாக்காது" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தங்களுக்கான வெற்றியாக தமிழக வெற்றிக் கழகம் கருதி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் இதுபற்றி எக்ஸ் தளப் பக்கத்தில் தற்போது ஒற்றை வரியில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 'நீதி வெல்லும்' என விஜய் பதிவிட்டுள்ளார்.
TVK Vijay | Karur Stampede | CBI | CBI Investigation | Supreme Court |