
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மைகளை மறைக்க முயற்சி செய்யும் திமுக அரசைக் கண்டித்து நீதிப்பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில், இன்று (டிச.31) பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மாநிலத் தலைவர் உமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்த நீதிப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் கோரிக்கை மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
முன்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதைக் கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, கடந்த டிச.27-ல் தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து தமிழக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் முன்பே சீமான் உள்ளிட்ட நாதகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.