

திருப்பரங்குன்றத்தில் தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபம் ஏற்றுவது தொடர்புடைய வழக்கில் தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகர இணை ஆணையர் ஆஜராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபத்தை ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகி ராம ரவிக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது.
தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். எனினும், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகிலேயே கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத்தன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபத்தை ஏற்ற மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்சி தமிழ்நாட்டுக் காவல் துறை இதை அனுமதிக்கவில்லை. நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபத்தை ஏற்ற மீண்டும் உத்தரவைப் பிறப்பித்தார். இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு சார்பில் தீபத் தூண் என்று சொல்லப்படும் இடத்தில் தீபத்தை ஏற்ற அனுமதிக்கவில்லை.
இதற்கடுத்த நாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். வழக்கு விசாரணை டிசம்பர் 9-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், பிரச்னை வந்தால் அரசே பொறுப்பேற்க வேண்டும், நீதிமன்றத்தைக் காரணம் சொல்ல முடியாது என்று வாதிடப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வாதங்களை முன்வைத்தது. இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிசம்பர் 17 அன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Thiruparankundram | Thiruparankundram Issue | Thiruparankundram Deepam | Madurai Bench | Madras High Court | GR Swaminathan |