போக்சோ வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

போக்சோ வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

ஏப்ரல் 25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டையைச் சேர்ந்த 37 வயதான பிரபல கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், கோவை நகரின் கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரேயர் ஹாலின் பாஸ்டராக உள்ளார். இவர் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ பாடல்களைப் பாடி ஆராதனை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் கோவையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து கடந்தாண்டு இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

கடந்தாண்டு 21 மே 2024 அன்று கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள ஜான் ஜெபராஜின் இல்லத்தில் விருந்து நடைபெற்றுள்ளது. தனது வளர்ப்பு மகள் மற்றும் அவளது தோழியுடன் ஜான் ஜெபராஜின் மாமா இந்த விருந்தில் கலந்துகொண்டார். இதில் வைத்து, இரு சிறுமிகளிடமும் ஜான் ஜெபராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

11 மாதங்களாக இந்த அத்துமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் மூலம் இது தொடர்பாக அண்மையில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (மத்திய) ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. குறிப்பாக, போக்சோ சட்டப் பிரிவுகள் 9(l)(m) மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜான் ஜெபராஜ் தலைமறைவாக இருந்த நிலையில், இவரைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு அருகே காவல் துறையினரால் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in