
ஜெயமோகனின் அறம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரபல அமெரிக்க எழுத்தாளரும், தொலைக்காட்சி பிரபலமுமான பத்மா லட்சுமி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பிரபல அமெரிக்க எழுத்தாளரும், தொலைக்காட்சி பிரபலமும், தொழிலதிபருமான பத்மா லட்சுமி சென்னையை பூர்வீகமாகக்கொண்டவர். இந்தியாவில் பிறந்திருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் பத்மா லட்சுமி, 2023 டைம்ஸ் இதழின் உலகின் நூறு செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் கணக்கில் நேற்று (ஆக. 29) பத்மா லட்சுமி வெளியிட்ட ஒரு பதிவில்,
`ஜெயமோகன் ஒரு எழுத்தாளர், என் குடும்பத்தைப் போலவே அவரும் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் (தமிழ் மற்றும் மலையாள மொழிகள்) வசிக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, அவரது அசல் எழுத்தை ரசிக்கும் அளவுக்கு எனக்கு தமிழில் நன்றாகப் படிக்க வராது.
எனவே இந்த மொழிபெயர்ப்புக்கு நான் நன்றி கூறுகிறேன், நீங்களும் அப்படித்தான் கருதுவீர்கள் என்று நினைக்கிறேன். அவர் நம்மில் பலருக்கும் பிரியமான எழுத்தாளர். மேலும் அவரது மொழிபெயர்ப்பாளருக்கும் சிறப்பு நன்றி!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவுடன் பகிரப்பட்டுள்ள காணொளியில் பத்மா லட்சுமி பேசியதாவது,
`துரதிர்ஷ்டவசமாக தமிழ் இலக்கியங்களை நான் அதிகம் வாசிப்பதில்லை, ஏனென்றால் எனது தமிழ் வாசிப்பு நிலை மூன்றாம் வகுப்பை விடக் குறைவாகும்.
ஆனால் தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஜெயமோகனின் கதைகள் அடங்கிய `ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ’(அறம்) நூலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் தமிழ் இலக்கிய நூலைத் தேடுகிறீர்கள் என்றால், இதை முயற்சி செய்து பார்க்கும்படி நான் பரிந்துரைக்கிறேன்’ என்றார்.