ஜெயக்குமார் மரண வழக்கு: 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

நாளை அல்லது நாளை மறுநாள் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் மரண வழக்கு
ஜெயக்குமார் மரண வழக்கு

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே 4 அன்று பகுதி எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஜெயக்குமாரின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜெயக்குமார் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் புகார் மனுவை அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஜெயக்குமாருக்கும் தனக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என ரூபி மனோகரன் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக தங்கபாலுவிடமும் தனிப்படை விசாரணை நடத்தியது.

இதுதொர்புடைய சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், வழக்கில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லை எனத் தகவல் வெளியாகின.

இந்நிலையில், ஜெயக்குமார் வழக்கு தொடர்பாகக் கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஐஜி கண்ணன் வழக்கை நேரடியாகக் கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் ஜெயக்குமார் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சில நாள்களாக ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்றும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in