அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி!

"ஒற்றுமைக்காகவே இந்தக் குழு. இது யாருக்கும் எதிரானது அல்ல"
அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி!
படம்: https://x.com/JCDPrabhakar

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவிலிருந்து வெளியேறியுள்ள ஜேசிடி பிரபாகர், புகழேந்திர ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்கள்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை கடந்த மார்ச் தொடங்கினார். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் ஆகியோர் இந்த அமைப்பில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். மக்களவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, கே.சி. பழனிசாமி ஆகியோர் சென்னையில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். ஓ. பன்னீர்செல்வத்தின் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவிலிருந்து வெளியேறுவதாகக் கூறிய ஜேசிடி பிரபாகர், அதிமுகவை ஒன்றிணைக்க ஒருங்கிணைப்பு குழுவைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

புகழேந்தி கூறுகையில், "அதிமுக 7 இடங்களில் டெபாசிட்டை இழந்தது வருத்தமளிக்கிறது. அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்துவிட்டது. கடந்த முறை தேனியில் ஒரு வெற்றி கிடைத்தது. இந்த முறை அதுவும் இல்லை.

அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. வடக்கிலிருந்து ஆள அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.

அதிமுக ஒற்றுமையாக ஒரு இடத்துக்கு வர வேண்டும். அதிமுகவில் ஒற்றுமை வேண்டும். அதற்குதான் இந்த ஒருங்கிணைப்புக் குழு. அதிமுகவினரை ஒன்றிணைக்கக்கூடிய பணிகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். அதிமுகவுக்கு தோல்விகள் போதும். தொண்டர்களால் இனியும் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஒற்றுமைக்காகவே இந்தக் குழு. இது யாருக்கும் எதிரானது அல்ல" என்றார் புகழேந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in