ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பரில் காலமானார். இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர்களில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ஒருவர்.

2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இதுதொடர்புடைய விசாரணையை அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் 2022-ல் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் பின்னர் தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு கருத்தில்கொள்ளவில்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக ஆதரவாளர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் தலைமையிலான அமர்வு, ஆறுமுகசாமி ஆணையம் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in