ஜெயலலிதா நிச்சயமாக இந்துத்துவத் தலைவர்தான்: தமிழிசை சௌந்தரராஜன்

"ராமர் கோயில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்தை வாங்கி அனுப்பியவர் ஜெயலலிதா."
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக ஓர் இந்துத்துவத் தலைவர் என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஓர் இந்துத்துவத் தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் பேசியது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் சலசலப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார், ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ஜெயலலிதா நிச்சயமாக ஓர் இந்துத்துவத் தலைவர் என்று கூறியுள்ளார்.

"ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்வ தலைவர் என்பதை நிச்சயமாக சொல்வேன். அதை இன்று அவர்கள் எதிர்க்கலாம். ஆனால், ஜெயலலிதா மிகத் தெளிவாக இருந்தார். கோயில்களில் குடமுழுக்கை நடத்தியுள்ளார். கரசேவகர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். கரசேவகர்களைக் காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது, இது தவறு என துணிச்சலாகக் குரல் கொடுத்துள்ளார். ராமர் கோயில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்தை வாங்கி அனுப்பியவர் ஜெயலலிதா. கோயில்களில் அன்னதானம் போட்ட தலைவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா இந்துத்துவத் தலைவர் என்பதற்கு எவ்வளவோ காரணங்களை எங்களால் முன்னிறுத்த முடியும். அவர் இன்று இருந்திருந்தால், நிச்சயமாக ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருப்பார். ராமர் கோயில் எங்களுடைய கனவு, இது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் சொல்லியிருப்பார். அப்படி சொல்வதற்கான அடித்தளமும் உள்ளது.

கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தபோது, இன்றைக்கு எதிர்ப்பவர்கள் அன்று எதிர்த்தார்களா?. இந்துத்துவம் என்கிற குறுகிய வட்டத்தில் அவரை சுருக்கவில்லை. இது பெரிய வட்டம். நாங்கள் அவரை இந்தியா முழுக்கக் கொண்டுசெல்ல விரும்புகிறோம். இந்துத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்தியக் கலாசாரத்தில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு வாழ்க்கை முறை" என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in