

சட்டப்பேரவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சார்ந்த பேச்சுவார்த்தையை நேற்று (பிப். 22) தொடங்கியது. அதன்படி திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ. ராசா, ஆர்.எஸ். பாரதி, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்
தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்திருக்கின்ற மனிதநேய மக்கள் கட்சி, நிச்சயமாக பாடுபடும் என்பதை மீண்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
5 தொகுதிகள் ஒதுக்கக் கோரிக்கை
சென்ற சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளில் மமக போட்டியிட்டு 100% வெற்றி பெற்றது. எனவே இந்த முறை ஐந்து தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். இது முதல் கட்ட பேச்சு வார்த்தை என்பதால் எங்களது கோரிக்கைகளை எடுத்துகொண்டு முதலமைச்சருடன் கலந்தாலோசித்துவிட்டுச் சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
இந்தத் தேர்தலிலும் மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும். அதையும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். எங்களுக்குத் தொகுதிகள் அதிகமாகத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பாக விவாதிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.
மநீமவுடன் ஆலோசனை தேதி மாற்றம்
முன்னதாக இன்று திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறியப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத்துடனான பேச்சுவார்த்தை தேதியை பிப்ரவரி 27-க்கு ஒத்தி வைத்தனர்.
The Manidhaneya Makkal Katchi will contest the Assembly elections under the symbol of the Rising Sun, party leader Jawahirullah has said.