போதைப் பொருள் கடத்தல்: ஜாஃபர் சாதிக் கைது!

"முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாஃபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்."
ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகத் தகவல்
ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகத் தகவல்@arjaffersadiq

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கடந்த பிப்ரவரி 15-ல் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த 3 மாதங்களில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளதாகவும், இந்தக் கடத்தல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. இந்தச் செய்தி வெளியானதும் திமுகவினுடைய சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஜாஃபர் சாதிக் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஜாஃபர் சாதிக் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஜாஃபர் சாதிக்கைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in