
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து யாருமே பேசக்கூடாது என்று அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேட்டியளித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்துத் தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற சீமான் உள்ளிட்ட நாதகவினரை காவல்துறையினர் இன்று (டிச.31) காலை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீமான் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,
`இது அவசியமற்ற கொடுமையான அணுகுமுறையாகும். இதே வள்ளுவர் கோட்டத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். (ஆனால்) இன்றைக்கு மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும், சட்ட ஒழுங்கிற்கு இடையூறு வந்துவிடும் என்று கூறப்படும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை.
ஒருவேளை போராட அனுமதி இல்லையென்றால், கைது செய்வது குறித்து முன்பே தகவல் தெரிவிக்கப்படும். (அதன்பிறகு) நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து எதற்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம் என்று கூறிய பிறகு, எங்களைக் கைது செய்து இதுபோல கூடாரங்களில் அடைப்பார்கள். பின்னர் விடுவிப்பார்கள். இதுவே வழமையாக நடக்கும்.
ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. (இதனால்) நாங்கள் எதற்காக அங்கே கூடினோம் என்பதே தெரியாமல் போய்விட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கைக்கு நடந்த இந்தக் கொடுமையை அரசு நேர்மையாக அணுகுகிறது என்றால், அதற்காகப் போராடுபவர்களைத் தடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த விவகாரம் குறித்து யாருமே பேசக்கூடாது என்பது ஏற்புடையது அல்ல. இது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் அவர் (ஞானசேகரன்) உள்ளே சென்றது எப்படி? அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை தூரத்தில் இருந்து படம் எடுத்து, அந்தக் காட்சியைக் காட்டி (அவர்) மிரட்டியுள்ளார்.
நான் கூறுவதைக் கேட்கவில்லை என்றால், எனக்கு நெருக்கமாக இருக்கும் பேராசிரியர்களிடம் இதைக் காட்டுவேன், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன் எனவே என் விருப்பதற்கு நீ இணங்கவேண்டும் என்று அவர் மிரட்டியுள்ளார். சம்பவம் நடந்தபோது அவரது கைபேசி ஏரோப்ளேன் மோடில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர் ஒருவரிடம் கைப்பேசியில் உரையாடி, என்னைப் போல அந்த சாரிடமும் அனுசரித்து இருக்கவேண்டும் என்று (அந்தப் பெண்ணிடம்) கூறியுள்ளார். அப்படியென்றால் அந்த சார் யார்? அப்போது அவரது கைபேசி ஏரோப்ளேன் மோடில் இருந்தது என்றால், அவரிடம் வேறொரு கைப்பேசி இருந்ததா?
அரசியல் பின்புலம் இல்லாமல் ஒரு தனி மனிதனுக்கு எப்படி இவ்வளவு துணிவு வந்தது? இப்படி நடந்துவிட்டது, இதற்காக வருந்துகிறோம் இனி இப்படி நடக்காது நீங்கள் அச்சத்தைக் கைவிடுங்கள், இதற்குக் கடுமையான தண்டனையை பெற்றுத் தருவோம் என ஏதாவது ஒன்று பேசினால் நமக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் அவரது கைகால்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது எந்த மாதிரியான அணுகுமுறை?’ என்றார்.